முன்னுரை


தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். இது 130,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 72,147,030 ஆக உள்ளது. தமிழ்நாடு, வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை போற்றும் கோவில்கள், மலைவாசத்தலங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; பல உலக பாரம்பரியத் தளங்கள் தமிழ்நாட்டில் உள்ளன

 

ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் ஆபத்தினை மக்களுக்கு எடுத்துரைக்க இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் நீண்ட காலம் அழியாமல் இருப்பதாலும், பல்வகை உபயோகங்களினாலும், நீர் உறிஞ்சா தன்மையாலும், இலகுவாக தயாரிக்க முடிவதாலும் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதாலும், நமது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூறிய காரணங்களுக்காக இயற்கை பொருட்களை தவிர்த்து நாம் முற்றிலுமாக பிளாஸ்டிக்கை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தோம். .

 

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் நாளொன்றிற்கு சுமார் 15,000 மெட்ரிக் டன் அளவு பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 40% அளவு சேகரிக்கப்படுவதில்லை. இந்தியாவில், பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2011 ஆண்டு முதல் செயல்பாட்டில் இருப்பினும், அதனை முழுமையாக செயல்படுத்த மாநிலங்களால் இயலவில்லை. மேலும் 70% பிளாஸ்டிக் பொருட்கள் மறு உபயோகம் இன்றி தூக்கி எறியப்படுகிறது. பல வகைபிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தாலும், சுற்றுசூழல் மாசு ஏற்படுத்துவதாக பெரும்பாலும் அறியப்படுவது, ஒரு முறை மட்டும் உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களே ஆகும். அவை, பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் புட்டிகள் போன்றவை ஆகும். மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேல் இவையே ஆகும்

 

 

பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. பிளாஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்னர், இயற்கை வளங்களிலிருந்து பெறக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருளும், எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், நீண்ட காலம் பூமியில் நிலைத்திருக்கிறது. பிளாஸ்டிக் உபயோகத்தினால், உயிரினங்களுக்கு மரபணு பாதிப்புகளை ஏற்படுத்துதல், நீர்நிலைகளை மாசுபடுத்துதல், மற்றும் நிலங்களை ஆக்கிரமித்து மழைநீர் நிலத்தடில் ஊடுருவதையும் தடுக்கிறது. ஒரு முறை மட்டும் உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு புதிய உணவு பொருளாக மாறி கடல்வாழ் உயிரினங்களின் சூழலியலை மாற்றியமைக்கிறது.

 

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிடுவோம். இப்பயணத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து, கை கோர்த்து நமது பூமித்தாயினை பாதுகாத்திடுவோம். "ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் - தமிழகத்தை மாசு இல்லா மாநிலமாக மாற்றுவோம்"